
Quartier Dix30 மோதல்: 13 சிறார்கள் கைது; வன்முறையை படம்பிடித்தவர்களும் குற்றவாளிகளே என காவல்துறை எச்சரிக்கை
Montreal-இன் South Shore பகுதியிலுள்ள Brossard-இல் அமைந்துள்ள Quartier Dix30 வணிக வளாகத்தில் நிகழ்ந்த கொடூரமான மோதல் சம்பவம் தொடர்பாக, 13 இளம் வயதினர் கைது செய்யப்பட்டுள்ளனர். Longueuil காவல்துறை (SPAL) மேற்கொண்ட தீவிர புலன் விசாரணைக்குப் பிறகே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி, மாலை சுமார் 5:30 மணியளவில் இந்த கொடூரத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. அவற்றில், பல இளம் வயதினர் ஒன்றுசேர்ந்து ஒரு மாணவனை மட்டும் குறிவைத்து கை, கால்கள் மற்றும் தடியால் கொடூரமாகத் தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. மற்றொரு காணொளியில், பல இளைஞர்களிடையே பெரும் கைகலப்பு ஏற்படுவதும் பதிவாகியுள்ளது.
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த 15 வயதுடைய சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அவனுக்கு ஏற்பட்ட காயங்கள் மிகவும் கடுமையானவை என்றும், அதன் வடுக்கள் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் என்றும் Longueuil காவல்துறை ஆய்வாளர் Gino Iannone வேதனை தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து விரிவான புலன் விசாரணையை முன்னெடுத்த காவல்துறையினர், Longueuil, Saint-Philippe-de-La Prairie மற்றும் Candiac ஆகிய நகரங்களில் 12 இடங்களில் அதிரடி சோதனைகளை நடத்தினர். இதன் முடிவில், 15 வயதுடைய நான்கு சிறார்களும், 16 வயதுடைய ஒன்பது சிறார்களும் என மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மோதல்களுக்குப் பின்னால் திட்டமிட்ட குற்றக் கும்பல்களின் ஈடுபாடு இல்லை என்பதை ஆய்வாளர் Gino Iannone உறுதிப்படுத்தினார். 'பள்ளியில் இளைஞர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் தொடர்ச்சியாகவே இந்த மோதல் நிகழ்ந்துள்ளது. அது பள்ளிக்கு வெளியே வன்முறையாக வெடித்துள்ளது' என அவர் விளக்கமளித்தார்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது ஆயுதங்கள் கொண்டு தாக்குதல், வன்முறையில் ஈடுபடுதல் மற்றும் குற்றத்திற்குத் துணைபோதல் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படலாம் என SPAL கூறியுள்ளது. குறிப்பாக, தாக்குதலின் போது உதவி செய்யாமல், அதனை வேடிக்கை பார்த்து சிரித்தபடியும், காணொளியாக பதிவு செய்துகொண்டும் இருந்தவர்கள், 'குற்றத்திற்கு உடந்தையாக இருந்தவர்கள்' என்ற பிரிவில் விசாரிக்கப்படுவார்கள் என காவல்துறை கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
'தாக்குதல் நிகழும்போது, சுற்றியுள்ள இளைஞர்கள் சிரிப்பதையும், அதனைப் படம்பிடிப்பதையும் காண முடிகிறது. இது மிகவும் கவலைக்குரிய அம்சம்' என ஆய்வாளர் Iannone குறிப்பிட்டார். 'ஒரு குற்றச் செயலில் நேரடியாகப் பங்கேற்க வேண்டிய அவசியமில்லை. சம்பவ இடத்தில் இருந்துகொண்டு, வன்முறையைத் தடுக்காமல், அதனை ஊக்குவித்து, அவசர உதவிக்கு அழைக்காமல் இருப்பதும் குற்றமாகக் கருதப்படும்' என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
