Advertisement

On Air

Connecting to stream...

No scheduled programming.

Toronto விக்டோரியா தின கொண்டாட்டம்: கூட்டத்தின் மீது பட்டாசுகளை வீசி எறிந்த இருவர் மீது வழக்குப்பதிவு
Canada

Toronto விக்டோரியா தின கொண்டாட்டம்: கூட்டத்தின் மீது பட்டாசுகளை வீசி எறிந்த இருவர் மீது வழக்குப்பதிவு

By MadushanMay 19, 2026

Torontoவின் விக்டோரியா தின கொண்டாட்டத்தின் போது, அங்கு கூடியிருந்த மக்கள் கூட்டத்தை நோக்கி பட்டாசுகளை வீசி எறிந்ததாகக் கூறப்படும் இரண்டு நபர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக டொராண்டோ காவல்துறை அளித்த அறிக்கையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் சிறுவன் என்றும், மற்றொருவர் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் என்றும் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இவர்களின் அடையாள விபரங்கள் எதையும் காவல்துறை இன்னும் வெளியிடவில்லை.

ஆஷ்பிரிட்ஜஸ் பே (Ashbridges Bay) பகுதியில் எடுக்கப்பட்டு ஊடகங்களுக்கு அனுப்பப்பட்ட சில வீடியோ காட்சிகளில், கடற்கரை மற்றும் நடைபாதையில் இருந்த மக்கள் கூட்டத்தை நோக்கி, ஒருவர் "ரோமன் கேண்டில்" (Roman Candle) எனப்படும் எரியும் பட்டாசு வகையை குறிவைத்து சுடுவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்த மக்கள் அலறியடித்தபடி தங்களைக் காப்பாற்றிக் கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர்.

இதே நிகழ்வின் போது திருட்டு மற்றும் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டதாக மேலும் மூன்று நபர்களை டொராண்டோ காவல்துறை கைது செய்துள்ளது. ஆனால், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த கூடுதல் விவரங்கள் எதையும் காவல்துறை இன்னும் பகிர்ந்து கொள்ளவில்லை. டொராண்டோவின் வரலாற்று சிறப்புமிக்க இந்த விக்டோரியா தின பட்டாசு திருவிழா, நகரின் கடற்கரை பகுதியில் நடைபெற்ற அதே இரவிலேயே இந்த கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற இதேபோன்றதொரு கொண்டாட்டத்தின் போது பெரும் வன்முறை வெடித்தது. அப்போது துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்தனர், இருவர் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்டனர், ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்தது, மேலும் பல குழுக்கள் ஒருவரையொருவர் நோக்கி பட்டாசுகளை கொளுத்தி எறிந்து கலவரத்தில் ஈடுபட்டனர். அந்த மோசமான சம்பவத்திற்குப் பிறகு, அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு கடந்த சில ஆண்டுகளாக டொராண்டோ காவல்துறை இந்த நிகழ்வின் போது தங்களது பாதுகாப்பை பல மடங்கு பலப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Boom Tamil
Live NowBoom Tamil Radio