
Toronto: காவல்துறை அதிகாரி மீது வாகனத்தை மோதிய 12 வயது சிறுவன் மீது கொலை முயற்சி வழக்கு
Toronto நகரின் East York பகுதியில், திருடப்பட்ட வாகனம் ஒன்றைக் கொண்டு காவல்துறை அதிகாரி மீது மோதிய சம்பவத்தில், 12 வயது சிறுவன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல கடுமையான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக Toronto காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம் திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.
திங்கட்கிழமை அதிகாலை சுமார் 1 மணியளவில், Donlands Avenue மற்றும் O’Connor Drive சந்திப்பில் வாகனம் ஒன்று திருடப்பட்டது தொடர்பான தகவலையடுத்து, அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது, திருடப்பட்ட வாகனத்தில் தப்பிச் செல்ல முயன்ற சிறுவனை அதிகாரிகள் தடுத்து நிறுத்த முயன்றனர். அந்த முயற்சியின் போது, நிலைமையைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த மோதலின் போது, அந்த வாகனம் காவல்துறை அதிகாரி ஒருவர் மீது மோதியதில், அவர் பலத்த காயமடைந்தார்.
காயமடைந்த அதிகாரி உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவரது காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சைக்குப் பிறகு அவர் வீடு திரும்பியுள்ளதாக, இந்த வழக்கை விசாரித்து வரும் Special Investigations Unit (SIU) தெரிவித்துள்ளது. சிறிது நேரத்தின் பின்னர், காவல்துறையினர் அந்த வாகனத்தை மீண்டும் இடைமறித்து, 12 வயது சிறுவனைக் கைது செய்தனர். அவனுக்கும் உயிருக்கு ஆபத்தில்லாத காயங்கள் ஏற்பட்டிருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
Youth Criminal Justice Act-இன் கீழ், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனின் அடையாளத்தை வெளியிட முடியாது. அவன் மீது கொலை முயற்சி, வாகனத் திருட்டு, $5,000-க்கு மேற்பட்ட பெறுமதியான திருட்டுப் பொருளை வைத்திருந்தமை, ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியமை, காவல்துறையின் கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் தப்பிச் சென்றமை மற்றும் விபத்து நடந்த இடத்திலிருந்து தப்பி ஓடியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
காவல்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மரணம், படுகாயம் அல்லது துப்பாக்கிப் பிரயோகம் போன்ற சம்பவங்களை விசாரிக்கும் ஒரு சுயாதீன அமைப்பான Special Investigations Unit (SIU), இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. இதனிடையே, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு சந்தேகநபர் தேடப்பட்டு வருவதாகவும், அவர் குறித்த விபரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை எனவும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
