
Toronto: இளம்பெண்ணை பின்தொடர்ந்து துன்புறுத்தியதாகக் குற்றச்சாட்டு - 50 வயது நபர் கைது
கனடாவின் Toronto நகரில், இளம்பெண் ஒருவரைப் பின்தொடர்ந்து குற்றவியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.
கடந்த மே 21 ஆம் திகதி இரவு 7 மணியளவில், 29 வயதான பெண் ஒருவர் Queen Street East மற்றும் Broadview Avenue சந்திப்புப் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, மர்ம நபர் ஒருவர் அவரைப் பின்தொடரத் தொடங்கியுள்ளார். அப்பெண் அந்த இடத்திலிருந்து விலகிச் செல்ல முயன்றபோதும், அந்த நபர் அவரை விடாமல் துரத்தியுள்ளார்.
சம்பவ இடத்திலிருந்து சமயோசிதமாகத் தப்பிய அப்பெண், உடனடியாக காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணையைத் தொடங்கிய காவல்துறையினர், திங்களன்று சந்தேகநபரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர் 50 வயதான Todd Christopher Rose என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் மீது மீண்டும் மீண்டும் பின்தொடர்தல் மற்றும் தேவையற்ற முறையில் தொடர்புகொண்டு தொல்லை கொடுத்தல் ஆகிய குற்றவியல் துன்புறுத்தல் பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
