
Vaughan நகரில் பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு: இருவர் உயிரிழப்பு, கொலையாளிகளுக்கு வலைவீச்சு
புதன்கிழமை பிற்பகல் Vaughan நகரில் உள்ள வீடு ஒன்றின் முன்பாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு ஆண்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று என காவல்துறை தெரிவித்துள்ளது. மாலை 5:30 மணியளவில் Martin Grove மற்றும் Langstaff Roads பகுதிக்கு அருகிலுள்ள Kaiser Drive இல் உள்ள குடியிருப்பு ஒன்றின் வெளியே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக York Regional Police அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்தபோது, அந்த வீட்டின் முன்பாக பல துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இரண்டு ஆண்கள் கிடப்பதைக் கண்டனர். அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. பலியானவர்களில் ஒருவர் அந்த வீட்டில் வசிப்பவர் என்றும், மற்றொருவர் அதே பகுதியைச் சேர்ந்தவர் என்றும் ஊடகத் தொடர்பாளர் Kevin Nebrija தெரிவித்தார். அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என்றாலும், ஒரே பகுதியில் வசிப்பவர்கள் என்ற ரீதியிலேயே பழகி வந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடந்த உடனேயே மூன்று நபர்கள் ஒரு நீல நிற SUV ரக காரில் தப்பிச் செல்வதைக் கண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே, அங்கிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Huntington மற்றும் Kirby roads பகுதியில் கார் ஒன்று தீப்பிடித்து எரிவதாகப் போலீசாருக்கு அழைப்பு வந்தது. எரிக்கப்பட்ட அந்தக் கார், இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடையது என போலீசார் நம்புகின்றனர். அந்த வாகனம் திருடப்பட்டதா என்பது குறித்து தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
துப்பாக்கிச் சூடு நடந்த சமயத்தில் அந்த வீட்டிற்குள் மற்ற நபர்களும் இருந்தனர், ஆனால் அவர்களுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. பட்டப்பகலில் நடந்த இந்த இரட்டைக்கொலை அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், முதலில் ஒரு துப்பாக்கிச் சத்தம் கேட்டதாகவும், பின்னர் சில நொடிகள் கழித்து அடுத்தடுத்து ஐந்தாறு முறை சுடும் சத்தம் கேட்டதாகவும் தெரிவித்தார். சந்தேக நபர்கள் குறித்த அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இது ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்பதால் பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏதுமில்லை எனத் தெரிவித்த போலீசார், தகவல் தெரிந்தவர்கள் தங்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
